சிவராத்திரி தினத்தில் மன்னாரில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதம்! மக்கள் கவலை

Report Print Ashik in சமூகம்

மன்னாரில் இரு வணக்கஸ்தலங்களில் இருந்த சிலைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதுடன், ஒரு ஆலயத்தில் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் இந்திய இராணுவத்தால் அமைக்கப்பட்ட 'லிங்கேஸ்வரர்' தேவஸ்தானத்தில் காணப்பட்ட மூன்று சிலைகள் அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளது.

மன்னார் - தாழ்வுபாடு பிரதன வீதி, கீரி சந்தியில் கடந்த 18 வருடங்களாக காணப்பட்ட ஆலையடி பிள்ளையார் சிலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார் - தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக பல தடவைகள் அடையாளம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மகா சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகி இருந்த நிலையில் குறித்த சம்பவமானது அப்பகுதி மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.