45 வருடங்களாக பூட்டியிருந்த தொழிற்சாலைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியா - பீட்றூட் தோட்டம் மாக்கஸ் கீழ்பிரிவில் 1973 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலைக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்றைய தினம் அதிகாலை 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் உள்ள களஞ்சியசாலை பகுதியில் தீ பரவி அதிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற தொழிற்சாலைக்கு அருகில் தோட்டத்தின் சிறுவர் பராமரிப்பு நிலையமும் மின்சாரம் வழங்கும் பகுதியும் காணப்படுகிறது.

இதேவேளையில் சுமார் 45 வருடகாலமாக மூடப்பட்டிருக்கும் இந்த தொழிற்சாலையின் பகுதியில் களஞ்சியசாலை ஒன்று மாத்திரம் இயங்கி வந்துள்ளது.

களஞ்சியசாலையில் தும்பு மெத்தைகள் மற்றும் இரும்பு பொருட்கள் மாத்திரம் காணப்பட்டுள்ளன. இந்த பகுதியில் தான் முதலில் தீப்பரவியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தை அறிந்த நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் ஸ்தலத்திற்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதேவேளை, இந்த தீ சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.