வடக்கில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட கண்ணிவெடிகள் அகற்றல்

Report Print Yathu in சமூகம்

மனித நேயக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் டாஸ் மற்றும் கலோறஸ் நிறுவனங்கள் இதுவரை இரண்டு இலட்சத்து 95 ஆயிரத்து 216இற்கும் மேற்பட்ட மிதிவெடிகளை அகற்றியிருப்பதாக மேற்படி நிறுவனங்களின் புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்திலிருந்த விடுவிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வெடிபொருள் அகற்றும் நடவடிக்கைகள் மனிதநேயக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையின் ஜப்பான், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளின் நிதியுதவியுடன் டாஸ் நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு முதல் வெடிபொருள் அகற்றும் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனையிறவு, முகமாலை, போன்ற பகுதிகளில் இவ்வாறான வெடிபொருள் அகற்றும் பணிகளை கடந்த எட்டு வருடங்களாக தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

இதுவரை 71 ஆயிரத்து 215 மிதிவெடிகளையும் 162 வாகன எதிர்ப்பு கண்ணிவெடிகளையும் 19 ஆயிரத்து 925 வெடிக்காத நிலையில் காணப்பட்ட வெடிபொருட்களையும் ஒரு இலட்சத்து 747 இற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகளையும் மீட்டுள்ளதாக மேற்படி நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் வெடிஅகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் கலோறஸ் நிறுவனம் இரண்டு இலட்சத்து 23ஆயிரத்து 965 மிதிவெடிகளையும் 969 வாகன எதிர்ப்பு வெடிகளையும் வெடிக்காத நிலையில் காணப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் உள்ளடங்கலாக எட்டு இலட்சத்து 261 இற்கும் மேற்பட்ட வெடிபொருட்களையும் கடந்த ஆண்டு வரை மீட்டிருப்பதாக மேற்படி நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்படி பாரியளவில் கண்ணிவெடி அகற்றல்களை மேற்கொண்டு வரும் இரு நிறுவனங்களும் தொடர்ந்தும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக வெடிபொருள் அகற்றும் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.