நேர்மையுடனும் வெளிப்படையாகவும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்!

Report Print Sumi in சமூகம்

முடிவடைந்துள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் புதிய ஜனநாயக, மாக்சிச, லெனினிசக் கட்சியின் வட பிராந்தியச் செயலாளர் தோழர் கா. கதிர்காமநாதன் (செல்வம்) தலைமையில் வலி. கிழக்கு பிரதேச சபைக்கு வாளிச் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவின் சார்பாக நான்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தோழர் கா. கதிர்காமநாதன் (செல்வம்) புத்தூர் மேற்கு 08 ஆம் வட்டாரத்தில் ஆயிரத்து ஐந்நூறு வரையான வாக்குகளைப் பெற்று மக்களின் ஆமோகமான ஆதரவுடன் வெற்றிபெற்றுள்ளார்.

தனக்கெதிராகப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தினைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளிலும் பார்க்க ஆயிரம் வாக்குகள் வரை அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையகத்தில் கட்சியின் மாத்தளை மாவட்டச் செயலாளர் தோழர் டேவிட் சுரேன் தலைமையில் உக்குவளை பிரதேச சபையில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவானது ஒரு பிரதிநிதியைப் பெற்றுக்கொண்டுள்ளது என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மத்திய குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி. கா. செந்திவேல் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ் அறிக்கையில்,

இவ் இரு பிரதேச சபைகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியானது தொழிலாளர், விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் விழிப்புணர்வுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

ஆளும் வர்க்கக் கட்சிகளையும் மேட்டுக்குடி ஆதிக்கக் கட்சிகளையும் நிராகரித்து உழைக்கும் மக்கள் அளித்துள்ள வாக்குகளுக்குப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.

பல்வேறு நெருக்கடிகளையும், பொய்ப் பிரச்சாரங்களையும், இருட்டடிப்புகளையும் மீறி மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற்றிருக்கின்ற நாம், ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கோ, ஆதிக்க சக்திகளுக்கோ எவ்வகையிலும் துணைபோகப்போவதில்லை.

சுதந்திரமான முறையில் மக்களுடைய தேவைகளை நிறைவேற்ற நேர்மையுடனும் வெளிப்படையாகவும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்பதனை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதேபோன்று, மீன் சின்னத்தில் சுயேட்சைக் குழுக்களாக போட்டியிட்ட உழைக்கும் மக்கள் வலி. மேற்கு பிரதேச சபையில் 02 பிரதிநிதிகளையும், காரைநகர் பிரதேச சபையில் 03 பிரதிநிதிகளைப் பெற்று முதன்மை நிலையிலும் உள்ளமையுடன், கிளிநொச்சி மாவட்டத்தில் கேடயச் சின்னத்தில் போட்டியிட்டு 15 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டமையானது மக்கள் அதிகாரம் நோக்கிய அரசியல் பாதையில் எமது மக்கள் ஒன்று திரள ஆரம்பித்துள்ளமையைக் கட்டியம் கூறிநிற்கின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.