இலங்கை அரசாங்கத்தின் புதிய சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!

Report Print Murali Murali in சமூகம்

தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தை இரத்து செய்ய கோரி, இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர் படகிற்கு 17.50 கோடி ரூபா அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றில் தாக்கல் செய்துள்ளது.

இச்சட்டத்தை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இராமேஸ்வரத்தில் நேற்று இடம்பெற்ற மீனவர் சங்க கூட்டத்தில், “இலங்கை சிறையில் உள்ள 136 மீனவர்கள், 186 படகையும் விடுவிக்க வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும்.

தமிழக மீனவர்களை அழிக்கும் நோக்கில் இலங்கை அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை இரத்து செய்ய மத்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும்” என கோரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை வலியுறுத்தி நாகை, இராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் நடத்தும் பாம்பன் தேசிய நெடுஞ்சாலைபாலம் முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்பது, இப்போராட்டத்திற்கு ஆதரவாக இன்று முதல் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, இலங்கை வசமுள்ள 186 படகின் உரிமையாளர்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.