யாழ்.நீதிமன்றிலிருந்து கணவனை தப்பிக்க வைத்த மனைவி...

Report Print Shalini in சமூகம்
1888Shares

யாழ்.நீதிமன்றில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பி ஓடிய சந்தேகநபர் 6 மாதங்களின் பின் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது, சிறைச்சாலை காவலில் இருந்து தப்பிச்சென்ற குற்றத்துக்கான தீர்ப்பு நாளை வழங்கப்படும் என நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ் - ஊர்காவற்றுறை பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது குறித்த சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த சந்தர்ப்பத்தில் அவர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

நீதிமன்றிலிருந்து சந்தேகநபர் தப்பி ஓடிய போது அவரது மனைவி நீதிமன்ற வாசலில் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையிலேயே இருந்துள்ளார். இந்த மோட்டார் சைக்கிளில் ஏறி குறித்த சந்தேகநபர் தப்பித்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குறித்த சந்தேகநபரின் மனைவியும் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அவரும் குறித்த வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்னிலையாகாத காரணத்தால் அவருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பொலிஸில் இருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் 6 மாதங்களின் பின் கடந்த வாரம் வவுனியாவில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். எனினும் அவரது மனைவி தலைமறைவாகியே உள்ளார்.