திருகோணமலை - கந்தளாய் பகுதியில் ஒன்பது ஆடுகளை திருடிய நபரை இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பேராறு, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கந்தளாய் பிரதேசத்திலுள்ள சீனி ஆலை பகுதியில் ஏழு ஆடுகளையும், கந்தளாய் பெருமாள்மடு பகுதியில் 2 ஆடுகளையும் திருடியதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.