வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருவதற்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் மற்றும் ஏனைய வழிகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் முல்லைத்தீவில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஐரோப்பிய நாட்டினை தளமாகக் கொண்டு இயங்கிவரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பின் பிரதிநிதி வூவி தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போதே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மேலும், இது குறித்து இலங்கை அரச அதிகாரிகளுடனும் மற்றும் தமது அமைப்பின் ஏனைய பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக அங்கு சென்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.