போர் முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகியும் போர்க்களத்தில் இருப்பது போன்று தோன்றுகிறது

Report Print Yathu in சமூகம்
134Shares

போர் முடிவுற்று ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இன்னமும் போர்க்களத்தில் இருப்பது போன்றே தோன்றுகிறது என மக்கள் தெரிவிக்கின்றதாக வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த 12.02.2018 அன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், புதுமாத்தளன், வட்டுவாகல் போன்ற பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்பு நடவடிக்கை மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் 12.02.2018 திங்கள் அன்று முள்ளிவாய்க்கால் பகுதில் வெடிப்புச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

வீட்டுத்தோட்டத்தினை துப்பரவு செய்து தீ மூட்டியபோதே வெடிபொருள் வெடித்துள்ளது. குறித்த வெடிப்புச் சம்பவத்தில் அயல் வீடுகளுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளபோதும் உயிராபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை.

முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் 2012ஆம் ஆண்டில் மீள்குடியமர்த்தப்படும்போது இப்பகுதியில் முற்றாக வெடிபொருட்கள் அகற்றப்பட்டுவிட்டதாக அறிவித்தல் வழங்கப்பட்டே மீள்குடியமர்த்தப்பட்டனர்.

இவ்வாறு அறிவித்தல் வழங்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டிருந்தாலும் இன்றும் வெடிபொருட்கள் காணப்படுகின்றன.

இதுவரையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் வெடிபொருள் மீட்புச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது மக்கள் தமது வாழ் இடங்களில் துப்பரவு செய்து தீ மூட்டும்போதும் தமது பல தேவைகளுக்காக நிலத்தை தோண்டுகின்ற போதும் சில வெடிபொருட்கள் வெடித்து சிதறுகின்றன.

மக்களினால் அடையாளம் காணப்பட்ட வெடிபொருட்கள் உரியவர்களுக்கு அறியப்படுத்தி செயலிழப்பு செய்யப்படுகின்றன.

ஆங்காங்கே நிகழும் இவ்வாறான வெடிப்புச்சம்பவங்களால் தமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வதில் மிகுந்த இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும், போர் முடிவுற்று ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இன்னமும் போர்க்களத்தில் இருப்பதாகவே தோன்றுவதாகவும் மக்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் மக்களின் இத்தகைய இடர்பாடுகளைத் தீர்க்கும் பொருட்டு இந்த வெடிப்புச் சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவர உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.