கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறிவிடும்

Report Print Kumar in சமூகம்
157Shares

கடந்த காலங்களில் விட்ட தவறுகளை இனியும் ஏனைய தமிழ் கட்சிகள் விடுமாக இருந்தால் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறிவிடும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மண்முனைப்பற்று பிரதேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான விஷேட கூட்டம் இன்று காலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளியிடுகின்ற செய்திகளின் அடிப்படையில், எங்களது கொள்கைகளை ஏற்றுக் கொண்ட கட்சிகளுடன் பேசத்தயார் என்கின்ற அடிப்படையிலும், சர்வதேச, தேசிய அரசியல் கொள்கைகள் என பல்வேறு வியாக்கியானங்கள் கூறி,

2015இல் கிழக்கு மாகாணசபை ஆட்சியமைப்பதில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முன்வந்த எமது கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தனின் கோரிக்கையினை உதாசீனம் செய்வது இம்முறை உள்ளூராட்சி சபையில் மட்டக்களப்பு மக்களின் ஆணையினை உதாசீனம் செய்வதாக அமைந்திருப்பது வேதனையை அளிக்கின்றது.

தலைவர்களுக்காகவோ அல்லது அரசியல் கட்சிகளுக்காகவோ மக்களல்ல. மக்களுக்காகவே அரசியல் கட்சிகளும் தலைவர்களும் செயற்பட வேண்டும்.

அப்பொழுதுதான் உண்மையான சமுதாய கட்டமைப்பை வளர்த்துக் கொண்டு தமிழர்களின் இருப்பினை பேணி பாதுகாக்க முடியும்.

கடந்த காலங்களில் விட்ட தவறுகளை இனியும் ஏனைய தமிழ் கட்சிகள் விடுமாக இருந்தால் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

சர்வதேசம் மற்றும் தேசிய கொள்கைகளை கூறிக்கொண்டும், ஏனைய விடயங்களை பேசிக்கொண்டும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் ஆட்சியமைக்க வேண்டிய சபைகளை கோட்டை விடுகின்ற நிலமைக்கு தள்ளப்பட்டு விடக் கூடாது என்பதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெளிவாக இருக்கின்றது.

கிழக்கு இலங்கை தமிழர் ஒன்றியம் உள்ளிட்ட பல சமூக அமைப்புக்கள் எம்மை சந்தித்தன. அந்த நேரத்தில் நாம் தெளிவாக கூறியிருக்கின்றோம், உள்ளூராட்சி சபைகளில் தமிழர்கள் ஆட்சி அமைப்பதற்கு திறந்த மனதுடன் பேசுவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தயாராக இருக்கின்றது என்று.

அனைவரும் இதயசுத்தியுடன் மக்களுக்காக பேசுவதற்கு முன்வர வேண்டும். அப்போது தான், தமிழ் பிரதேசங்களை பாதுகாத்துக் கொள்ளமுடியும் என தெரிவித்துள்ளார்.