அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்

Report Print Aasim in சமூகம்

முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணத்தை உயர்த்தப் போவதாக இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையை சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தன ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை மூலம் விடுத்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளின் உதிரிப்பாகங்களுக்கான விலை கடந்த சில மாதங்களுக்குள் 150 மடங்கு அதிகரித்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக உதிரிப் பாகங்கள் பொருத்துதல், பராமரிப்பு செலவுகள் என்பன கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசாங்கம் தலையிட்டு உதிரிப்பாகங்களின் விலைகளைக் குறைத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்க முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இல்லாவிட்டால் வேறு வழியின்றி எதிர்வரும் மார்ச் மாத கடைசியில் இருந்து முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணத்தை உயர்த்த நேரிடும் என்றும் சுனில் ஜயவர்த்தன தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைக்கு முதலாவது கிலோமீட்டருக்கு 50ரூபா அறவிடும் முச்சக்கர வண்டி சாரதிகள், அதற்கடுத்த கிலோமீட்டர்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 40 ரூபா வீதம் அறவிடுகின்றனர்.

எனினும், கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆரம்பம் முதல் பயண முடிவு வரை கிலோமீட்டர் ஒன்றுக்கு 50 ரூபா வீதம் அறவிடப்படும் என்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.