ஏறாவூர் - வந்தாறுமூலை கணேச வித்தியாலய வீதியை அண்டிய பகுதியிலுள்ள கொட்டிலொன்றிலிருந்து இளம் யுவதி ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் 20 வயதுடைய சண்முகரெத்தினம் பிரதீபா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த யுவதி அப்பகுதியிலுள்ள கடையொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளார். இன்றைய தினம் கடைக்குத் தயாராகவில்லை என பெற்றோர் தேடியபோது வீட்டுடன் சேர்ந்ததாக அமைக்கப்பட்டிருந்த கொட்டிலுக்குள் அவர் சடலமாகக் கிடப்பதை அவதானித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூறு பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த யுவதியை திருமணம் செய்வதாக உறுதியளித்திருந்த நபர் தான் வெளிநாட்டுக்கு தொழில் வாய்ப்புப் பெற்று செல்ல வேண்டும் என்று யுவதியிடம் 2 இலட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.
பணத்தை யுவதி வட்டிக்கு கடனாகப் பெற்று கொடுத்துள்ளதாகவும், கடைசியில் அந்த ஆண் நண்பர் வெளிநாடு செல்வதைக் கைவிட்டு விட்டதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
யுவதி தான் பெற்றுக் கொடுத்த கடன் தொகையை செலுத்த முடியாமலும், நம்பிக்கைத் துரோகத்தாலும் விரக்தியடைந்திருந்ததாக உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்தச் சம்பவத்திற்கு ஆண் நண்பர் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சம்பவம், தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.