மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இணையக்குற்றம் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட செயற்றிட்டம் ஒன்று மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
தற்போதுள்ள இணைய பாவனையில் மாணவர்கள் நல்லனவற்றை பெற்றுக்கொள்வதுடன் தீயவழிப்படுத்திக்கொள்ளும் இணைய செயற்பாடுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கல்வி அமைச்சின் அனுமதியுடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட நிதியுதவியுடன் தேவை நாடும் மகளிர் அமைப்பு குறித்த செயற்றிட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
இதன்போது, இணையத்தளங்களின் பாவனை முறைகளும் அதன் மூலம் மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் நன்மையான வழிமுறைகள் தொடர்பிலும் விரிவான கருத்துரைகள் வழங்கப்பட்டன.
அத்துடன், இணையத்தள பாவனையினால் மாணவர்களுக்கு கிடைக்கும் பாதகமான வழிமுறைகள் தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளன.