சிரேஸ்ட சட்டத்தரணி நீலகண்டன் மறைவுக்கு தமிழ் அரசியல் கைதிகள் இரங்கல்

Report Print Yathu in சமூகம்

அகில இலங்கை இந்துமாமன்றம், மன்னார் திருக்கேதீஸ்வர பரிபாலன சபை ஆகியவற்றின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமாகிய கந்தையா நீலகண்டன் அவர்களின் மறைவு தமிழ் மற்றும் இந்து சமூகத்திற்கு பேரிடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நீண்ட நெடுஞ்சிறை வாழ்வுக்குள் இருந்து விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளான எம்மீது மிகுந்த கரிசனை கொண்டவராக, செயற்பட்ட நீல கண்டன் ஐயா சிறைச்சாலைக்கு வருகை தந்து எமது சுக நலன்கள் தொடர்பில் கவனமீட்டியிருந்தார்.

அது மட்டுமல்லாமல் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தை ஒவ்வொரு அரசாங்கக் காலத்தின்போதும் நியாயபூர்வமான ரீதியில் வலுவாக வலியுறுத்தி வந்துள்ளார்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின்ஊடாக இந்து சமய கலாசார பண்டிகை மற்றும் விரதங்களின்போது, கைதிகளுக்குத் தேவையான பூசை பொருட்களையும் பிரசாதப் பொருட்களையும் தந்துதவி, எமக்கு இறை நம்பிக்கையினையும் ஆற்றுப்படுத்தலையும் ஏற்படுத்தி வந்துள்ளார். அவர் சமூகத்திற்கு ஆற்றி வந்த பணி அளவிட முடியாத அளப்பரியது.

அன்னாரின் இழப்பினால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும் நண்பகர்களுக்கும் ஆழ்ந்த இரக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் அன்னாரின் ஆத்மா பரம பதமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.