வித்தியாசமாக போராட தீர்மானித்துள்ள வேலையற்ற பட்டதாரிகள்

Report Print Kumar in சமூகம்
109Shares

தொடர்ச்சியாக வேலையற்ற பட்டதாரிகள் ஏமாற்றப்படுவார்களானால் அதற்கான பலனை அரசியல்வாதிகள் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் அனுபவிக்க வேண்டிவரும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவகாந்தன் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு, காந்திபூங்காவில் பட்டதாரிகள் இன்று காலை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்த போராட்டம் இன்று ஒரு வருடத்தினை பூர்த்தி செய்துள்ள நிலையிலும் 1127 பட்டதாரிகளுக்கே இதுவரையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது சிறு வெற்றியாகும். எமது போராட்டத்திற்க பொறுப்புக்கூற வேண்டிய அரசியல்வாதிகள் எங்களுக்கு வாக்குறுதிகளை மட்டுமே வழங்கினர். ஆனால் அந்த வாக்குறுதிகள் இதுவரையில் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர், கிழக்கு முதலமைச்சர் ஆகியோர் வழங்கிய உறுதிமொழிகளும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பல உறுதிமொழிகளையும் வழங்கிய போதிலும் அதுவும் நிறைவேற்றப்படவில்லை. இன்று கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு வெற்றி மாகாண சபையாக காணப்படுகின்றது.

எமது போராட்டத்தினை குழப்பும் வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவும் வருகைதந்து எமக்கான உறுதிமொழிகளை வழங்கி போராட்டத்தினை கைவிடுமாறு கூறியிருந்தனர்.

நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கிழக்கு மாகாண பட்டதாரிகளின் தரவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட போதிலும் எதுவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

நாங்கள் எமது போராட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போது எமது வாக்குளை வி.ஐ.பி.என எழுதி எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1700க்கும் அதிகமான வாக்குகள் வி.ஐ.பி.என செலுத்தப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் எமது போராட்டத்தினை வித்தியாசமாக கொண்டு செல்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களையும் இணைத்து கிழக்கு மாகாணத்தில் அரசியலில் குதித்து அரசியல்வாதிகளின் வாக்குகளை எங்களது வாக்குகளாக மாற்றி போராடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

எதிர்வரும் தேர்தல் காலத்திற்குள் வேலையற்ற பட்டதாரிகளின் நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் உக்கிரமான போராட்டமாக இருக்கும் என்றார்.