நீர்ப்பாசன அமைச்சரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன்

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நீர்ப்பாசன அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயிர்கள் சேதமடைவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள போதும் இது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாகவும், கட்டுக்கரை குளத்தில் நீரின் மட்டம் குறைவடைந்துள்ளமையினாலும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாய செய்கை பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள், விவசாய அமைப்பு மற்றும் வாய்க்கால் அமைப்பு ஆகியன இணைந்து அண்மையில் ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பி வைத்தனர்.

எனினும் விவசாயிகளுக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில் விவசாயிகள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து தங்களது பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

குறிப்பாக நாச்சியாத்தீவு குளத்தில் இருந்து நீர்ப்பாசன வசதிகள் செய்து தரப்பட்டால் தங்கள் பயிர்கள் காப்பாற்றப்படும். சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் காப்பாற்றப்படும். பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காப்பாற்றப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், விவசாயிகளின் இக்கட்டான நிலையினை அமைச்சருக்கு எடுத்துக்கூறி அவசரமாக நாச்சியாத்தீவு குளத்தில் இருந்து நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீர்ப்பாசன அமைச்சர், அதிகாரிகளுடன் அவசர சந்திப்பை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்துள்ளார்