வட்டுவாகல் கடற்படை முகாமிற்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு, வட்டுவாகல் கடற்படை முகாமிற்கு முன்பாக அப்பகுதி மக்கள் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கடற்படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை இன்றைய தினம் நில அளவீடு செய்யவிருந்த நிலையில் அவற்றை எதிர்த்து குறித்த மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

வட்டுவாகலுக்கும், முள்ளிவாய்க்காலுக்கும் இடைப்பட்ட 617 ஏக்கர் பரப்பளவுடைய நிலங்கள் 40இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காணிகளை மீட்டுத்தருமாறு பொதுமக்கள் வட்டுவாகல் கடற்படை முகாமிற்கு முன்பாக இதற்கு முன்னரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே, இன்றைய தினம் நில அளவீடு செய்வதற்கு அரச அதிகாரிகளினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, எமது காணியை படையினர் சுவீகரிக்க இடமளியோம் என தெரிவித்து அப்பகுதி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையின் காரணமாக நில அளவீடு செய்யவந்த அதிகாரிகள் மீளச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தும் மக்கள்

குறித்த இடத்திற்கு வருகைத்தந்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, நில அளவீடு செய்யும் இந்த நடவடிக்கை நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், இந்த தகவலை எழுத்து மூலம் அறிவிக்கும் வரை தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவித்து வீதியில் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதையடுத்து மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தொலைபேசி மூலம் அரசாங்க அதிபரை தொடர்பு கொண்டு குறித்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.