பிற்போடப்பட்டுள்ள வட்டுவாகல் கடற்படை முகாம் நில அளவை பணிகள்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - வட்டுவாகல் கடற்படை முகாம் முன்பாக மேற்கொள்ளப்படவிருந்த நில அளவை பிற்போடப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் குறித்த நில அளவை பிற்போடப்பட்டுள்ளது என கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் சி.குணபாலன் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் தற்காலிகமாக இந்த எதிர்ப்பு போராட்டத்தினை கைவிடுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரதேச செயலர் சி.குணபாலனால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில்,

மேற்படி விடயம் தொடர்பாக பிரதான நேவி முகாம் அமைப்பதற்கான காணி சுவீகரிப்பு பிரிவு 5இன் கீழ் வரைபடம் பெற்றுக்கொள்வதற்காக மேற்படி நில அளவை மேற்கொள்ளப்பட்டது.

இருந்தபோதிலும் 19.09.2017 இல் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கினைப்பு குழுக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டத்தின் அனுமதிபெற்ற பின்னர் நில அளவை மேற்கொள்ளமுடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நில அளவை மேற்கொள்வதில் காணி உரிமையாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட எதிர்ப்பை கருத்தில் கொண்டு மேற்படி நில அளவை நடவடிக்கையை 26.02.2018ல் முல்லைத்தீவு கச்சேரியில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கினைப்பு கூட்டத்தில் அனுமதி பெறப்படும்வரை பிற்போடுமாறு தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.