உதயங்க வீரதுங்கவை கைது செய்ய பிடிவிராந்துடன் துபாய் விரைந்த அதிகாரிகள்

Report Print Steephen Steephen in சமூகம்

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கை அழைத்து வர சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸார் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் துபாய் சென்றுள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் பீ.கே.டி. பிரியந்த ஆகிய அதிகாரிகளே நேற்று துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

உதயங்க வீரதுங்க கடந்த 4 ஆம் திகதி துபாயில் கைது செய்யப்பட்டார். ராஜதந்திர பிரச்சினை மற்றும் சந்தேக நபர்களை பரிமாறிக்கொள்ளும் சட்டம் தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு ஏற்பட்ட சிக்கல் காரணமாக உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வர முடியாது போனதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அவரை கைதுசெய்ய சென்றிருந்த 7 அதிகாரிகள் வெறுங்கையுடன் திரும்பினர். அப்போது அதிகாரிகளிடம் சர்வதேச சிகப்பு அறிக்கை பிடிவிராந்து இருக்கவில்லை.

எனினும் தற்போது சிகப்பு அறிக்கை பிடிவிராந்துடன் அதிகாரிகள் துபாய் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறான நிலைமையில், உதயங்க வீரதுங்க நாட்டில் இருந்து வெளியேற துபாய் அதிகாரிகள் தடைவிதித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இம்முறை சர்வதேச சிகப்பு அறிக்கை பிடிவிராந்துடன் துபாய் செல்வதால், அது சட்டவிரோதமாக பெற்றுக்கொள்ளப்பட்டது என்ற வாதங்களை முன்வைக்க உதயங்க வீரதுங்கவின் சட்டத்தரணிகள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.