பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களை சைகையின் மூலம் அச்சுறுத்திய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பாக உலக தமிழ் பேரவை பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அனுப்பிய மின்னஞ்சலுக்கு லண்டனில் உள்ள வெளிநாட்டு அலுவலகத்திலிருந்து, கொமன்வெல்த் அலுவலகத்தில் இருந்தும் பதில் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் சார்பாக அங்கு வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் இதை ஏற்க மறுத்த தமிழர்கள் அதற்கு எதிராக போராட்டம் நடத்தியதால், அப்போது இலங்கை தூதரக அதிகாரிகளுடன் நின்று கொண்டிருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் சைகை விடுத்தார், இது பிரித்தானியா இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது தொடர்பாக உலக தமிழ் பேரவை பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் லண்டனில் உள்ள வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் அலுவத்திற்கு கடந்த 10ஆம் திகதி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை நாடு கடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளித்து வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் அலுவலகம், இந்த சம்பவத்தை பிரித்தானிய அரசு மிகவும் தீவிரமாக எடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி இது குறித்து இலங்கை அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குறித்து வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றியுள்ளார்.
இதன்போது, அவர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை இலங்கைக்கு வரும்படி உத்தரவிட்டுள்ளதாகவும், அவர் வருகைத்தந்ததன் பின்னர் முறையாக விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நேற்றைய தினம் இலங்கை திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.