மட்டக்களப்பு, ஊத்துச்சேனை கிராமத்தில் வசித்துவரும் மக்கள் தமக்கான அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி அல்லலுறுவதாக தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான ஊத்துச்சேனை கிராமமானது கடந்த கால யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிராமமாக காணப்படுகின்றது.
இக்கிராமத்தில் 168 குடும்பங்கள் அடங்களாக 435 பேர் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த கிராமத்திலுள்ள மக்கள் அன்றாட கூலித் தொழில், சேனைப் பயிர் செய்கை, நன்னீர் மீன்பிடி மற்றும் கால் நடை வளர்ப்பு என்பனவற்றினை மேற்கொண்டு தங்களுடைய ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த, கிராமமானது காட்டுப்பகுதிக்கு நடுவிலும், பொலன்னறுவை, மட்டக்களப்பு எல்லைப் பகுதியிலும் காணப்படுவதன் காரணத்தினால் இப்பகுதியூடாக வரும் காட்டு யானைகளினால் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவர்களது சேனைப் பயிர்கள் மற்றும் வீடுகள் என்பன காட்டு யானைகளின் தாக்கத்திற்கு உட்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் பல தடவைகள் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடமும் மின்சார வேலி அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ள போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இங்கு நடைபெறுகின்ற போக்குவரத்து சேவையின் காரணமாகவும் மக்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், மக்கள் அவர்களது அவசர வைத்திய சேவைகளைப் பெற்றுக்கொள்ள வெலிக்கந்தை வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும், எனினும் அவ்வாறு செல்வதாயின், இங்கு ஒரு பேருந்து மாத்திரமே சேவையில் உள்ளது எனவும் அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.