வெளிநாடு சென்று வந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடுமை

Report Print Rusath in சமூகம்
1044Shares

மத்திய கிழக்கு நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்று வேலை செய்து விட்டுத்திரும்பிய மனைவியின் பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு கணவன் மாயமாகி விட்டதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏறாவூர் - பள்ளியடி வீதியை அண்மித்த பகுதியில் வாழும் 32 வயதுடைய செய்யது இப்றாஹீம் ஷஹீரா என்பவரே இதில் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“அம்பாறை - இறக்காமம் வரிப்பத்தான்சேனையைச் சேர்ந்த அலியார் முஹம்மது ஹமீன் (வயது 33) என்பவரை நான் திருமணம் செய்து எமக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

பொருளாதாரக் கஷ்டம் காரணமாக நான் சவூதி அரேபியா நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் வாய்ப்பு பெற்றுச்சென்றேன்.

இரவு பகலாக வீட்டுப் பணிப்பெண் வேலை செய்து இரண்டு வருடமாக கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை என் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவும் தொழில் செய்வதற்காகவும் என்று கணவன் கேட்டுக் கொண்டதனால் அவருக்கே அனுப்பி வைத்தேன்.

இவ்விதம் சுமார் 6 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை அவரது கணக்கிற்கு அனுப்பியிருந்தேன்.

நான் இல்லாத மனவேதனை காரணமாக தான் வீட்டுக்குச் செல்லாமல் தனது தாயுடன் இருப்பதாகவும் அவர் தொடர்ச்சியாக என்னிடம் கூறி வந்தார்.

அதேவேளை, எனது தாயுடன் குழந்தைகள் இருப்பதாகவும் நான் அனுப்பிய பணத்தில் படி ரக வாகனம் ஒன்று வாங்கி தான் தொழில் செய்து வருவதாகவும் கூறினார்.

நான் சவூதியில் இருந்து கொண்டு கணவன் கூறிய இந்த வார்த்தைகளை நம்பினேன். அதனால் தொடர்ந்து பணம் அனுப்பிக்கொண்டு தொடர்பிலும் இருந்தேன்.

கடந்த வாரம் நான் இரண்டு வருடங்கள் முடிந்து சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பப் போவதை அறிவித்தவுடன் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு என்னை அழைத்து வருவதற்காக வந்திருந்தார்.

பஸ்ஸில் வரும்போது எனது கைப்பையையும் அவரே வைத்துக் கொண்டார்.

ஏறாவூருக்கு அழைத்து வந்த அவர் வீட்டுக்கு என்னைக் கொண்டு வந்து சேர்ப்பித்து விட்டு தனது படி ரக வாகனத்தை எடுத்து வருவதாகக் கூறி விட்டுச் சென்றார். ஆனால், அப்போது போனவர் இன்னமும் திரும்பி வரவே இல்லை.

எனது, கைப்பையையும் அபகரித்துச் சென்று விட்டார் என்பதை பின்னர்தான் அறிந்தேன். அதில் ரொக்கப் பணம் 50 ஆயிரம் ரூபாவும் நகைகளும் இருந்தன.

நான் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றதிலிருந்து என்னுடன் தந்திரமாகப் பேசி இன்று வரை எனது கணவர் எனது பணம் நகைகளைக் கொள்ளையடித்து என்னையும் எனது பிள்ளைகளையும் ஏமாற்றியிருக்கிறார் என்பதை தற்போது எனது வீட்டு நிலைமைகளை நேரில் பார்த்த பின்னர் கண்டறிந்து கொண்டேன்.

தற்போது 12 மற்றும் 8 வயதான பாடசாலை செல்லும் பிள்ளைகளைப் பராமரிக்க முடியாமலும் குடியிருக்க இருப்பிடமில்லாமலும் கணவனால் ஏமாற்றப்பட்டு நிர்க்கதியாகியுள்ளேன்” என்றார்.