மட்டக்களப்பு, சந்திவெளியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவர், சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரையம்பதியில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் எதிர்த்திசையில் வந்த டிப்பர் வண்டி ஒன்று மோதியதால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரையம்பதி விபுலானந்தா வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய எஸ். சஞ்சேகுமார் என்பவர் இதன்போது உயிரிழந்ததுடன், 21 வயதுடைய எஸ். சதீஸ்குமார் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வண்டியின் சாரதி தப்பிச்சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.