வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அசமந்தப்போக்கு தொடர்பில் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா யாழ். வீதியில் வடிகால் கட்டுமானத்திற்காக வெட்டப்பட்ட பாரிய கிடங்கு தவறான முறையில் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், இரண்டு மாதங்கள் கடந்தும் சரிசெய்யப்படாமல் இருக்கின்றது.
இக்கிடங்கு பாரிய அனர்த்தங்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த கிடங்கு நீர் தேங்கி நிற்கக்கூடிய வகையில் காணப்படுகின்றது.
இதனால் நுளம்பு பெருக்கம் ஏற்பட வாய்ப்பள்ளதாக தெரிவிக்கும் மக்கள், கிடங்கு அமைந்துள்ள இப்பகுதியிலேயே சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் யாழ். வீதியில் விவசாய பண்ணையோரமாக வெட்டப்பட்ட வடிகான்களினூடாக நீர் வழிந்தோட முடியாதுள்ளமையினால் நீர் தேங்கி நின்று நுளம்பு பெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் கூறியுள்ளனர்.
எனவே இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு மகக்ளுக்கு ஏற்படவுள்ள நோய்த்தாக்கம் உட்பட அனர்த்தங்களை தடுக்கவழிவகை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.