இலங்கை வரலாற்றில் படித்த சமூகத்திற்கான வேலைவாய்ப்பினை ஐ.தே.க வழங்கவில்லை!

Report Print Nesan Nesan in சமூகம்
59Shares

இலங்கையில் உள்ள கட்சிகளில் ஐக்கிய தேசியக்கட்சியினை பொறுத்தமட்டில் இலங்கை வரலாற்றில் படித்த சமூகத்திற்கான வேலை வாய்ப்பினை கொடுத்த வரலாறே கிடையாது என அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தலைவர் ஏ.எச்.எம்.நஸ்ருதீன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஊடகவியலாளர் மாநாடு இன்று அம்பாறை காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

இவ்வூடக சந்திப்பில் அதன் தலைவர் ஏ.எச்.எம்.நஸ்ருதீன், செயலாளர் ஏ.எஸ்.ரினோஸ், பொருலாளர் கே.சுரேஸ் மற்றும் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கருத்துரைத்த அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தலைவர்,

மத்திய அரசினால் அனுமதி வழங்கப்பட்ட 4700 ஆசிரியர்களுக்கான ஆசிரிய வெற்றிடங்களில் வெறுமனே 1400 பேருக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கே மத்திய அரசாங்கம் வழங்கியிருந்தபோதும் கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மோசமான அநீதி விளைவிக்கப்பட்டிருக்கின்றது.

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாண ஆளுனர் போன்றோர் ஒனறிணைந்து எமது வேலையற்ற பட்டதாரிகளுக்கு பல விதத்திலும் அநீதி விளைவித்திருக்கின்றார்கள். இதனை எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்தில் ஆளுனராக நியமிக்கப்படும் ஒருவர் தமிழ் பேசும் சமூகத்தில் இருந்து நியமிகக்கப்பட வேண்டும். அதனை விடுத்து பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஒருவரை நியமிப்பதன் மூலம் தமிழ் முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சினைகளை கையாள முடியாத நிலையிலே இருந்து வருகின்றது.

பட்டதாரிகளின் நிலைபற்றி கிழக்கு மாகாணசபையோ, இந்த நல்லாட்சியோ நீதியான செயற்பாட்டினை செய்வார்களேயானால் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் சுயேட்சையாக களமிறங்கும் என்பதனையும் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புவதுடன், இந்த அரசாங்கத்திற்கு எதிராக வீடுவீடாக சென்று துண்டுப்பிரசுரங்களையும் விநியோகிக்க எண்ணியிருக்கின்றோம்.

அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் இந்த நாட்டின் ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஒரு வருடகாலமாக சந்திப்பதற்கான வாய்ப்புக்களை கேட்டிருந்தபோதும் இதுவரை அதற்கான எந்த முடிவினையும் அவர் எங்களுக்கு தரவில்லை இந்த விடயமானது எங்களை மிகவும் சினத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 10000ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதாக கட்சியின் செயலாளரால் ஊடகங்களில் அறிக்கைவிட்டிருந்தபோதும் இதுவரை 1000 பேருக்காவது தொழில்வாய்ப்பினை கொடுக்கமுடியாத நிலையிலே இந்த நல்லாட்சி இருந்து வருகின்றது.

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற போட்டிப்பரீட்சையில் 40புள்ளிகளுக்கு மேல் எடுத்து சித்தயடைந்த பட்டதாரிகள் நேர்முகப்பரீட்சைக்கு சென்ற பட்டதாரிகள் இருக்கும் நிலையில் பரீட்சையில் தோல்வியுற்ற பட்டதாரிகளின் 247 பேரினுடைய பெயர்ப்பட்டியலை வெளியிட்டிருப்பதானது மிகவும் நகைப்பிற்குரிய விடயமாகத்தான் பார்க்கவேண்டியிருக்கின்றது.

ஆகவேதான் எதிர்வரும் 3ஆம் திகதி 247 பேருக்கும் வழங்கவிருக்கும் ஆசிரிய நியமனத்தினை இரத்துச்செய்து அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பனை வழங்குவதற்கான நடவடிக்கைகளை குறிப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.