இராணுவத்தினர் வசமுள்ள 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

Report Print Aasim in சமூகம்
123Shares

இராணுவத்தினர் வசமுள்ள 500 ஏக்கர் காணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க அறிவித்துள்ளார்.

வவுனியா கூட்டுப்படைத் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளின் விடுவிப்பு தொடா்பான பிரச்சினைகள் தீவிரமாக உள்ளது.

எனினும், தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் காணிகளில் இருந்து இராணுவத்தினர் படிப்படியாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். எமது வசம் இருந்த 76 வீதம் காணிகள் தற்போதைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், நாங்கள் விடுவித்த தனியார் காணிகளில் சிலவற்றுக்கு உரிமையாளர்கள் இல்லை. சிலர் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

மேலும், சிலர் தங்கள் காணிகளின் உரிமையை உறுதிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர். அவ்வாறான நிலையில் காணிகள் அரசாங்க அதிபரினால் உரியவர்களுக்கு கையளிக்கப்படும் நடைமுறையில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இராணுவத்தினர் வசம் உள்ள மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.