யாழ். கோட்டையை கைப்பற்ற இராணுவத்தினர் திட்டம்.!

Report Print Mohan Mohan in சமூகம்
464Shares

யாழ். கோட்டையை இராணுவத்தினருக்கு வழங்கினால் பொதுமக்களின் காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை அங்கிருந்து நகர்த்தி காணிகளை விடுவிக்க முடியும் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்போதே யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் இராணுவ அதிகரிகளின் கோரிக்கையை தெரியப்படுத்தியுள்ளார்.

தொல்பொருள் திணைக்களத்திடமிருக்கும் யாழ்ப்பாண கோட்டை இராணுவத்தினருக்கு வழங்கப்படுமாயின் அங்கு இராணுவ முகாம்களை மாற்றிவிட்டு பெரும்பாலான பகுதிகளை விடுவிக்க முடியும் என இராணுவ அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரின் வசமிருக்கும் பல இடங்கள் விடுவிக்கப்படும் என்று அரசால் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அவை இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவற்றை விடுவிப்பது தொடர்பில் இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட்டம் ஒன்று ஒழுங்கமைக்க வேண்டும்.

பின்னர் அது தொடர்பில் அரசுடன் நாங்கள் பேச்சு நடத்துவோம் என்று இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

மேலும் தொல்பொருள் திணைக்களத்தினால் தற்பொழுது பராமரிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கோட்டை சுற்றுலாத்தளமாக உள்ளது.

யாழ். கோட்டை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டால் அதற்கு அருகாமையிலுள்ள பண்ணை சுற்றுலாக் கடற்கரை, பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.