கட்டுமுறிப்பு மக்களின் வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்த தனியார் அமைப்பு

Report Print Suman Suman in சமூகம்
88Shares

அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் வாகரை கட்டுமுறிப்பு குளம் மற்றும் ஆண்டான்குளம் பகுதி மக்களுக்கு டென்மார்க் நாட்டிலுள்ள வாணி சமூக பொருளாதார அமைப்பினைச் சேர்ந்தவர்கள் உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் அப்பகுதி மக்களுக்கு, உதவி பொருட்கள் சிலவற்றை குறித்த தனியார் நிறுவனம் வழங்கி வைத்துள்ளது.

இதன்போது, பத்து குடும்பங்களுக்கு இரண்டு, இரண்டு குடும்பங்கள் இணைந்து தொழில் செய்யக் கூடியவாறு ஐந்து தோணிகளும், நான்கு குடும்பங்களுக்கு கோழி மற்றும் கோழிக்கூடு என்பனவும், பத்துக் குடும்பங்களுக்கு வீச்சு வலைகளும், இருபது குடும்பங்களுக்கு கட்டு வலைகளும், ஆறு குடும்பங்களுக்கு தற்காலிக வீடும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றும் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் வாகரை கதிரவெளிப் பிரதேசத்தில் இருந்து இடது பக்கமாக சுமார் 22 கிலோமீற்றர் துரத்தில் கட்டுமுறிப்பு மற்றும் ஆண்டாங்குளம் எனும் குறித்த இரண்டு கிராமங்களும் அமைந்துள்ளன.

குறித்த இரண்டு கிராமங்களையும் மையமாகக் கொண்டு சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவை, வாகரை, குருநாகல், வாழைச்சேனை ஆகிய பகுதியில் இருந்த மக்கள் குடியேறி உள்ளனர்.

விவசாயத்தையும், மீன்பிடியையும் பிரதானமாகக் கொண்டு வாழ்ந்து வரும் குறித்த கிராம மக்கள், கடந்த காலத்தில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து மீண்டும் 2007ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வாழ்ந்து வரும் குறித்த கிராம மக்கள், இவர்களுக்கான அடிப்படை வசதிகளான மலசல கூடம், கிணறு என்பன இல்லாமலும், பெரும்பாலும் அனைத்து மக்களும் பொதுக் கிணறுகளை பயன்படுத்தும் நிலையும் காணப்படுவதுடன், வைத்தியசாலைக்கு சுமார் இருபது கிலோமீற்றர் தூரம், பயணம் செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரண்டு கிராமங்களிலும் சுமார் 230இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் இவர்கள் குடியமர்த்தப்பட்ட காலம் தொட்டு இவர்களுக்கான போக்குவரத்து பாதைகள் என்பன சீரமைப்புச் செய்து தரப்படாமல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.