மயானத்திற்காக போராடிய மக்களின் அவலத்தை தீர்ப்பதற்காக குரல் கொடுக்க தயார்

Report Print Kumar in சமூகம்
177Shares

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் மக்களின் அவலத்தை தீர்ப்பதற்காக சகல கட்சி தலைமைகளுடன் இணைந்து குரல் கொடுக்க தயாராக இருப்பதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி செயலாளர் பி.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த கிராமத்திற்கு இன்றைய தினம் நேரடியாக சென்று மக்களை சந்தித்து உரையாடியதன் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை முதலில் சட்டரீதியான முறையில் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கு தேவையான சகல உதவிகளையும் செய்ய தங்களது கட்சி தயாராகவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

குறித்த பிரதேச மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்திவரும் மயானத்திற்கான ஆவணங்களை அடிப்படையாக வைத்து அதனை பெற்றுக்கொடுப்பதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன், கலந்துரையாட தீர்மானித்துள்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் இனமுறுகல் நிலை தோன்றிய நிலையில் தமது கட்சி ஆட்சி அமைத்த பின்னர் அப்பிரதேசங்களில் சுமூக நிலை ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் சம்பவம் நடைபெற்றபோது கொழும்பில் இடம்பெற்ற நேர்முகப்பரீட்சைக்கு சென்றிருந்தாகவும், அவரையும் சம்பவத்துடன், தொடர்பு படுத்தி கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவரின் தாய் அழுதவண்ணம் கூறியுள்ளார்.

மேலும், மயானத்திற்காக போராடிய கூலித்தொழில் செய்து வாழ்ந்துவரும் மக்களை கைது செய்து அவர்களின் வாழ்கை நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளமை நியாயமற்றது. ஆகவே உண்மைத்தன்மையை கண்டறிந்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என உருக்கமான கோரிக்கையினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மகளிர் அணித்தலைவி மனோகர் முன்வைத்துள்ளார்.