வவுனியா பள்ளிவாசல் முன்பாக விசமிகளால் டயர் எரிப்பு! இனமுறுகளை ஏற்படுத்துவதற்கான செயல்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா மதினா நகர் பள்ளிவாசலுக்கு முன்பாக இனந்தெரியாத நபர்களால் டயர் எரிக்கப்பட்ட சம்பவம் இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்த திட்டமிட்ட நாசகார செயல் என பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வவுனியா, மதீனாநகர் பள்ளிவாசல் முன்பாக நேற்று இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்றினால் டயர் எரியூட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மதினா நகர் பள்ளிவாசல் பகுதிக்கு பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

இந்த சம்பவத்தால் மதியா நகர் கிராமத்திலும் அதனைச்சூழவுள்ள பகுதியிலும் பதற்ற நிலைமை காணப்பட்டது.

இந்த நிலையில் மதினா நகர் பள்ளிவாசல் மௌலவி எம்.எச்.எஸ்.அலாவுதீன், பிரஜைகள் பொலிஸ் குழு தலைவர் முகமட் பைசல் மற்றும் மதினா நகர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் யு.அயுப்கான் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்,

பள்ளிவாசல் முன்பாக டயர் எரிக்கப்பட்ட நிலைமையானது ஒரு நாசகார செயலாகவே நாங்கள் பார்க்கிறோம். இவ்வாறான வணக்கஸ்தலங்கள் தாக்கப்படுவது இனங்களுக்கிடையிலான முறுகலை ஏற்படுத்தும் நோக்கமே.

இக்கிராமத்தில் யுத்த காலத்தில் கூட தமிழ், முஸ்லிம் இனங்களை சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ஒற்றுமையை சீர்குலைக்க சில விசமிகள் திட்டமிட்டு இந்த செயலைச் செய்கின்றார்கள்.

இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்திற்கான பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. இவ்வாறான வேண்டத்தகாத சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமலிருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

Latest Offers