கல்முனையில் கைது செய்யப்பட்ட 31 இளைஞர்களும் விடுவிப்பு!

Report Print Kalaiyarasi Kalaiyarasi in சமூகம்

கல்முனை பொலிஸ் பிரிவில் நேற்று கைது செய்யப்பட்ட 31 முஸ்லிம் இளைஞர்களும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி வட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை கண்டித்து அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் நேற்று கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் விசேட அதிரடிப் படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

இதனையடுத்து, எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மக்களை கட்டுப்படுத்துவதற்காக படையினரால் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், கண்ணீர்ப்புகைத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் 31 இளைஞர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த அனைவரும் இன்றைய தினம் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.