கண்டி கலவரத்திற்கு யார் பொறுப்பு கூறுவது: அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?

Report Print Murali Murali in சமூகம்

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுட்டதையடுத்து நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டாக சிங்கள் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தற்போது தீவிரமடைந்துள்ளது பெரும் கலவரமாக மாறியுள்ளதுடன், சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பொது மக்களின் ஏராளமான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஒரு அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்பாறையில் முஸ்லிம் ஹோட்டல் ஒன்றில் தயாரிக்கப்படும் உணவில் ஒருவகை மருந்து கலக்கப்படுவதாக தெரிவித்து அந்த பகுதியில் பெரும் முரண்பாடு தோன்றியிருந்தது.

இதன் போது முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னர் கண்டி மற்றும் அதனை அண்மித்த நகர் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.

அண்மையில் சிங்கள் இளைஞர் ஒருவர் மீது இஸ்லாமிய இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டதாகவும், இதில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள் இடம்பெற்ற போது ஏற்பட்ட வன்முறையானது தற்போது அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு தீவிரமடைந்துள்ளது.

இந்த வன்முறை சம்பவத்தில் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ள போதிலும் அது குறித்த உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. பௌத்த தேரர்கள் இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், அவை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது 10 நாட்களுக்கு அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனபோதிலும் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததையும் காணமுடிந்தது.

இலங்கையில் அவசரகால சட்டம் என்பது புதுமையான விடயமாக இல்லாவிட்டாலும், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தற்போது முதல் முறையாக நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த நான்காம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 நாட்களுக்கு அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர், உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையை சீர்செய்யும் நோக்கில் முப்படையினரும் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

இதனால் தற்போது நல்லாட்சி அரசாங்கம் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கின்றது. உள்நாட்டில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ள நிலையில், சர்வதேசநாடுகளும் இலங்கைக்கு கடும் அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே அமெரிக்க, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை சரிசெய்ய உடன்நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளன.

இது ஒருபுறம் இருக்க உள்ளூராட்சி தேர்தலில் பாரிய சரிவை சந்தித்துள்ள அரசாங்கத்தை, முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி விமர்சிக்க தொடங்கியுள்ளது.

அத்துடன், மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தில் இருக்கின்ற சில அமைச்சர்களும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அவரது செயலாளர், இரண்டு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட நபர்கள் இருப்பதாக அமைச்சர் ராஜித்த சேனாரட்ன கூறியுள்ளார்.

எனினும், இந்த சதி நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் நடவடிக்கை எதுவும் இல்லையென கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய தேசியக்கட்சியின் இயலாமையை இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2014ஆம் ஆண்டில் தர்கா நகரில் இதுபோன்ற வன்முறை சம்பவம் ஒன்று ஏற்பட்டிருந்ததை தொடர்ந்து அதனை மிகவும், சுமூகமான முறையில் முடிவுக்கு கொண்டு வந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையிலேயே, கண்டி சம்பவத்திற்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. எவரோ ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒரு இனத்தின் மீது தாக்குதல் நடத்துவது சரியா? என்ற வாதப்பிரதி வாதங்கள் எழுந்துள்ளன.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய அமைச்சர் ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கேள்வியை எழுப்பியுள்ளனர்.

அத்துடன், முஸ்லிம் மக்களின் தற்பாதுகாப்பிற்காக அரசாங்கம் ஆயுதங்களை வழங்க வேண்டும் என அமைச்சர் ஹிஸ்புல்லா நேற்றைய தினம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வாறான நிலையில், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் இது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளது. நாட்டில் வன்முறை தலைதூக்கியுள்ள நிலையில், சட்டம், ஒழுங்கு அமைச்சர் எடுத்த நடவடிக்கை என்ன?

நாட்டில் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி இருக்கின்ற நிலையில், அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டும் வன்முறைகள் இடம்பெற்றமைக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.?

அவசரகால சட்டத்தின் போது ஜனாதிபதிக்கு இன்னும் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். அப்படியிருந்தும் ஏன் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தாமதம் ஏற்படுகின்றது என்ற பல கேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டிருந்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னரே அம்பாறை மற்றும் கண்டி வன்முறை சம்பவங்கள் அரங்கேறியிருந்தன.

இது பிரதமர் ரணிலுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று கூட சமூக ஆர்வலர்களினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. இவ்வாறு பல கேள்விகள் எழுப்ப்படுவதற்கு ஒரு காரணம் நாட்டில் மீண்டும் ஒரு போர் உருவாகிவிடுமோ என்ற அச்சம்தான்.

இதனை மஹேல ஜயவர்தன மற்றும் சங்ககார உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் சமூகவலைதளங்கள் மூலம் விடுத்த பதிவுகள் மூலமாகவும், ஏனையவர்கள் முன்வைக்கும் கருத்துகள் மூலம் நோக்க முடிகின்றது.

ஏற்கனவே, இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் அப்படியொரு நிலைக்கு நாடு சென்று விடக்கூடாது என்பதே நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது.

இதற்காகவேண்டியே, பல்வேறு தரப்புகளும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்க நேரிட்டுள்ளது. எனவே, ஒவ்வொருவரும் தங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்களை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது.

அது ஜனாதிபதியாக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும் சரி அவர் அவர் தங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்களை சரியாக பயன்படுத்த வேண்டும் என அரசியல் அவதானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது நாட்டில் புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், கண்டி கலவரம் தொடர்பில் முக்கிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கண்டி வன்முறை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இவ்வாறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டால் அது வெறும் அறிக்கை சமர்பிக்கும் குழுவாக மட்டும் இருக்க கூடாது எனவும், நீதி நேர்மைகளை நடைமுறைப்படுத்தும் குழுவாக இருக்க வேண்டும் என பலரும் கருதுகின்றனர்.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்களிடம் முறையாக விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் அடுத்த கட்டநகர்வுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

அப்போது மட்டுமே நாட்டில் இனவன்முறைகள் தலைதூக்காது என அரசியல் அவதானிகளும், சமூக ஆர்வலர்களும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.