திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய இலங்கை அகதிக்கு கிடைத்த தண்டனை

Report Print Shalini in சமூகம்

இந்தியாவில் உள்ள மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் பெண் ஒருவரை காதலித்து ஏமாற்றிய இலங்கை அகதிக்கு இராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கு இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியும், மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும் பொறுப்பு வகிக்கும் ஏ.கயல்விழி முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இதில் ணெ்ணை மானபங்கம் செய்த குற்றத்திற்காக குறித்த நபருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டையும் 26,000 ரூபாய் அபராதமும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய குற்றத்துக்காக ஒரு வருட சிறையும், 5,000 ரூபாய் அபராதமும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை யை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

மொத்த அபராதத் தொகையான 31,000 ரூபாயில் 30,000 ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், 1,000 ரூபாயை வழக்குச் செலவுக்காகவும் கொடுத்து விட வேண்டும் என்றும், சிறைத் தண்டனையான 8 ஆண்டுகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருப்பதாகவும் நீதிபதி ஏ.கயல்விழி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த 24 வயதுடைய இலங்கை அகதியான பிரசாத் என்பவரும் அதே அகதிகள் முகாமில் வசித்து வந்த 24 வயதுடைய சுகன்யாவும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சுகன்யாவை திருமணம் செய்து கொள்வதாக கூறிய பிரசாத் அவருடன் உறவு கொண்டதையடுத்து சுகன்யா கர்ப்பிணியானார். கர்ப்பிணியான சுகன்யாவை பிரசாத் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.

இதையடுத்து சுகன்யா இராமேஸ்வரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்வழக்கு விசாரணையின் போது சுகன்யாவுக்கு 4 மாத பெண் குழந்தை இருந்தது. அக்குழந்தைக்கு மரபணு சோதனையும் செய்யப்பட்டதில் பிரசாந்துக்கும், சுகன்யாவுக்கும் பிறந்தது என்பதும் உறுதியானமை குறிப்பிடத்தக்கது.