கண்டி வன்முறை: நிர்க்கதியானவர்களுக்கு நிவாரணம் சேகரிப்பு

Report Print Rusath in சமூகம்

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ளவர்களுக்காக இன்றைய தினம் நிவாரணம் சேகரிக்கப்பட்டுள்ளது.

நிவாரண சேகரிப்பில் ஏறாவூர் உலமா சபையின் அனுசரணையுடன், ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் தொண்டர்கள் இணைந்து ஈடுபட்டுள்ளதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத் தலைவர் அஷ்ஷெய்ஹ் எம்.எல்.அப்துல்வாஜித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது தொடர்பாக ஏறாவூர் நகர மற்றும் அயற்புறங்களிலுள்ள பள்ளிவாசல்களில் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி அகதி முகாமிலுள்ள ஏழைகளுக்கு உதவுமாறு அடிக்கடி ஒலிபெருக்கிகளில் உதவிகோரும் அறிவிப்புச் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் உலர் உணவுப் பொருட்களாக அரிசி, பருப்பு, சீனி, பால்மா, ரின் மீன் என்பனவற்றையும், அன்றேல் பணத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதற்கமைவாக பொதுமக்களும், பொது அமைப்புக்களும் பணம் மற்றும் பொருட்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவற்றைச் சேகரித்து கண்டி மாவட்டத்தில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு அகதி முகாமில் தஞ்சமடைந்திருக்கும் அன்றாடத் தொழிலாளர்களுக்கு நேரடியாகக் கொண்டு சென்று உரியவர்களிடம் கையளிக்கப்படும்.

ஏறாவூர் பிரதேச பள்ளிவாசல்களிலும் குறிக்கப்பட்ட இடங்களிலும் நிவாரண சேகரிப்பு மையங்கள் மூலம் நிவாரணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.