எமக்காக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்

Report Print Yathu in சமூகம்

சர்வதேச சமூகம் தலையிட்டு எமது பூர்வீக நிலங்களை எங்களிடம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

பூர்வீகமாக தாம் குடியிருந்த நிலங்களை மீட்டுத்தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்கள் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

இங்கு குறித்து மக்கள் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பகுதியில் ஐந்து தலைமுறைகளுக்கு மேலாக நாங்கள் வாழ்ந்த பூர்வீக நிலங்கள் இவை.

நாங்கள் எங்களுடைய சொந்த நிலங்களுக்காகவே போராடி வருகின்றோம், இதனை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் பின்னடித்து வருகின்றது.

எங்களுடைய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இரண்டாவது தடவையாக ஐ.நா கூட்டத்தொடர் நடக்கின்றது.

இரண்டாவது தடவையாக நடக்கின்ற இந்தக் கூட்டத்தில் எங்களுடைய பிரச்சினைகள் கருத்தில் எடுக்கப்பட்டு எமது நிலம் விடுவிக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் எங்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது, எமது பூர்வீக மண்ணை பெற்றுத்தருவதற்கு சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.