இலங்கை அகதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு, தமிழ்நாட்டின் திருவள்ளுர் மாவட்டம் - குமிடிபூண்டி அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தினால் இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த முகாமில் இருந்து அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் அழைத்துச் செல்வதாக உறுதியளித்து, ஏமாற்றும் முகவர்கள் குறித்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அவர்கள் கூறும் வார்த்தைகளை நம்ப வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் இலங்கை அகதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து பெற்றுக் கொள்வதில் இருக்கின்ற சவால்களை விளக்கப்படுத்தும் வகையில், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கடிதம் ஒன்றும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து அகதிகளாக அவுஸ்திரேலியா வந்த பலர், மீண்டும் இலங்கைக்கே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் அகதி முகாம்களில் வசிக்கின்றவர்கள் அவ்வாறு அவுஸ்திரேலியா நோக்கி வந்தாலும் மீண்டும் நாடு கடத்தப்படுவார்களே தவிர, அங்கு குடியேற்றப்பட மாட்டார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குமிடிபூண்டி அகதிகள் முகாமில் 10,000 இற்கும் அதிகமான இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த போதும், தற்போது வெறும் 4,000 அகதிகளே வசிக்கின்றனர்.

பலர் மீண்டும் இலங்கை திரும்பியுள்ள நிலையில், சிலர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருப்பதாக நம்பப்படுகிறது.