வியாழனன்று கூடுகின்றது பொலிஸ் ஆணைக்குழு

Report Print Rakesh in சமூகம்

கண்டி கலவரத்தின்போது பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பில் விசாரணை நடத்தவுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழு, அது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை கூடவுள்ளது.

அத்துடன், வன்முறைகள் வெடித்த பகுதிகளுக்கு நேரில் பயணம் மேற்கொள்ளவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடி சாட்சியங்களைப் பதிவுசெய்யவுள்ளனர்.

அம்பாறை மற்றும் கண்டி வன்முறைகளின்போது சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்குப் பொலிஸார் தவறிவிட்டனர் என்றும், பக்கச்சார்பான முறையிலேயே அவர்கள் நடந்துகொண்டனர் என்றும் பாதிக்கப்பட்ட மக்களும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மனித உரிமை அமைப்புகளும் பொலிஸார் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பொலிஸாருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையே எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.