இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளை வடமாகாணசபையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளை வடமாகாணசபையிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கையினை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் முன்வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் 118வது அமர்வு, இன்று வடமாகாணசபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தபோது அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “யாழ்.தேர்தல் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூடியிருந்தது.

இதன்போது இராணுவத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் முன்பள்ளிகளை வடமாகாணசபையிடம் ஒப்படைப்பது தொடர்பில் தெளிவாக ஆராயப்பட்டது.

அதில் இராணுவம் நிர்வகிக்கும் முன்பள்ளிகள் அனைத்தையும் வடமாகாண சபையிடம் ஒப்படைக்கவேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதென தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

அதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முன்னெடுப்பார்கள்” என அவை தலைவர் மேலும் கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்த மாகாண கல்வி அமைச்சர்,

“இராணுவம் நிர்வகிக்கும் முன்பள்ளிகளில் மாணவர்களுக்கு இராணுவ ஒழுக்கங்கள் போதிக்கப்படுவதாகவும், மாணவர்களுக்கு சீருடைகளும் இராணுவ சீருடைகளை ஒத்ததாக வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேற்படி முன்பள்ளிகளை வடமாகாணசபை பொறுப்பேற்றால் அவர்களுக்கு இப்போது வழங்கப்படும் ஊதியம் 30 ஆயிரம் ரூபாய் வரை காணப்படுவதல் மற்றைய முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் அதேயளவு ஊதியத்தை வழங்கவேண்டிய நிலை வரும். இல்லையேல் ஏற்றத்தாழ்வுகள் வரும் என கூறினார்.

இதற்கு மீண்டும் பதிலளித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம்,

“இராணுவம் நிர்வகிக்கும் முன்பள்ளிகளை மட்டுமல்லாமல் அந்த முன்பள்ளிகளுக்காக பாதுகாப்பு ஊடாக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியையும் வடமாகாண சபையிடம் ஒப்படைக்கவேண்டும் என்றே நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த விடயத்தை சரி செய்யலாம் என கூறினார்”