உடைந்துள்ள நவகிரி ஆற்றுப் பாலத்தை புனரமைக்குமாறு கோரிக்கை

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட அனைக்கட்டியவெளி பிரதான வீதியில் காணப்படும் பாலம் மிக நீண்ட காலமாக சீரற்ற நிலையில் காணப்படுவதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

நவகிரி கிளை ஆற்றுக்குக் குறுக்காக போடப்பட்டுள்ள இப்பாலம் உடைந்தும், சிதைவடைந்தும், காணப்படுவதால் இவ்வீதியில் பயணம் செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் குறித்த பாலத்தினூடாக பயணித்த ஆசிரியர் ஒருவர் சறுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியை அண்மித்த பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த பாலத்தினை அன்றாடம் பயன்படுத்தி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாவனைக்கு உதவாத வகையிலும், உயிராபத்தை ஏற்படுத்தும் வகையிலும் காணப்படுகின்ற பாலத்தையே மக்கள் பயன்படுத்தி வருகின்ற நிலையில் குறித்த பாலத்தை ஊடறுத்துச் செல்லும் மக்கள் பிரிதிநிதிகள் இதனை கண்டுகொள்ளாமலிருப்பது வருத்தத்திற்குரியது என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, உரியவர்கள் இது தொடர்பில் கவனத்திற்கொண்டு, பாலத்தை புனரமைப்புச் செய்துத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் குறிப்பிடுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாலங்கள் புதிதாக அமைக்கப்பட வேண்டியுள்ளன. தற்போது நாம் மாவட்டத்தின் சில இடங்களில் புதிய பாலங்களை அமைத்து வருகின்றோம், அவற்றில் சில வேலைத்திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளன.

மேலும், மாவட்டத்தில் 100 பாலங்கள் அமைப்பதற்கு உரிய திட்ட முன்மொழிவுகளை சம்மந்தப்பட்ட அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

அதில் ஆனைக்கட்டியவெளி பிரதான வீதியில் அமைந்துள்ள நவகிரியாற்றுக்குக் குறுக்காக இடப்பட்டுள்ள பாலமும் அடங்கியுள்ளது.

எனவே, அவற்றுக்குரிய அனுமதிகள், நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றதும் இவற்றின் நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.