திருட்டில் ஈடுபட்ட நான்கு சிறுவர்கள் விளக்கமறியலில்

Report Print Ashik in சமூகம்

ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள சந்திவெளிப் பிரதேசத்தில் இரண்டு கடைகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான சிறுவர்களை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி இன்றைய தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இன்றைய தினம் சந்தேக நபர்களான சிறுவர்கள் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, நீதவான் 26ஆம் திகதி வரை மட்டக்களப்பிலிலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் பாதுகாப்பில் வைத்து இந்தச் சிறுவர்களைப் பராமரித்து அடுத்து தவணைக்கு சிறுவர்களை முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திவெளியிலுள்ள கைப்பேசி விற்பனை நிலையம் மற்றும் உணவு விடுதி ஆகியவற்றிலிருந்து திருடப்பட்ட 4800 ரூபாய் பணம், சுமார் 35 க்கு மேற்பட்ட கைப்பேசிகள், 2 டப்கள், கமெரா, அலைபேசி பற்றரி சார்ஜர்கள், அலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் என்பனவற்றுடன் ஏறாவூர் பொலிஸாரால் நான்கு சிறுவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களும் 10 தொடக்கம் 14 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.