விசாரணைகளின்பின் சதிகாரர்களின் பெயர்கள் அம்பலம்: சட்டம், ஒழுங்கு அமைச்சர்

Report Print Rakesh in சமூகம்

கண்டியில் ஏற்பட்ட இன வன்முறையின் பின்னணியைக் கண்டறிவதற்காக பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றும், அவை முடிவடைந்த பின்னர் சூத்திரதாரிகளின் பெயர், விவரங்கள் அம்பலப்படுத்தப்படும் என்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

கண்டி உட்பட நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 230 பேர் நேற்று வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 161 பேர் கண்டி மாவட்டத்திலும் ஏனைய 69 பேர் வெளியிடங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கண்டி நிர்வாக மாவட்டத்துக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊடரங்குச் சட்டம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இன வன்முறையையடுத்து மூடப்பட்டிருந்த பாடசாலைகளும் நேற்றுமுதல் மீள இயங்க ஆரம்பித்துள்ளன. முடங்கிப்போயிருந்த கண்டி மக்களின் இயல்பு வாழ்க்கையும் வழமைக்குத் திரும்பியுள்ளது.

இந்நிலையில், சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளவை வருமாறு,

கண்டி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரும் விழிப்பாகவே இருக்கின்றனர்.

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இன வன்முறையின் பின்னணியில் வெளியிடங்களிலிருந்து வந்தவர்களும் தொடர்புபட்டுள்ளனர்.

சில அரசியல்வாதிகள் பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று, கைதானவர்களை விடுதலைசெய்யுமாறு மிரட்டல் விடுத்துள்ளனர்.

பிரதேச அரசியல்வாதிகளும் தொடர்புபட்டுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. எனவே, தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அவை முழுமையாக முடிவடைந்த பின்னர் பின்னணியிலிருந்து செயற்பட்டவர்களின் பெயர், விவரங்கள் நாட்டுக்குப் பகிரங்கப்படுத்தப்படும்.

குரோத அரசியலை அனைவரும் கைவிடவேண்டும். குறுகிய நோக்கங்களுக்காக இத்தகைய செயற்பாடுகளில் எவரும் ஈடுபடக்கூடாது. சூத்திரதாரிகளுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

தம்மீதான குற்றச்செயல்களை மறைப்பதற்கு அமைச்சர்கள்மீது பழிபோடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.