காணாமல் போனோர் அலுவலக பிரதானியின் கோரிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

காணாமல் போனோரின் உறவினர்கள் தங்களுக்கு ஒத்துழைப்பையும் பலத்தையும் வழங்க வேண்டும் என்று, காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலி பீரிஷ் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோரது உறவினர்கள், தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன ஆனது என்பதை அறிவதற்காக பல வருடங்களாக அல்லது பல தசாப்தங்களாக காத்திருக்கின்றனர்.

இதனால் அவர்கள் பெரும் துயரத்துக்கும், விரக்திக்கும் ஆளாகியுள்ளனர். அவர்களது கேள்விகளுக்கு பதில் வழங்கும் நோக்கிலேயே மிகவும் தாமதமாகவேனும் காணாமல் போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

காணாமல் போனோரை கண்டறிதல் மற்றும் அவர்களுக்கு நிகழ்ந்தவற்றை அறிதல், காணாமல் போனோர் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களது உரிமைகளை பாதுகாத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வழிகளை அடையாளம் காணுதல், இவ்வாறான காணாமல் போதல்கள் மீள இடம்பெறாதிருப்பதற்கான பரிந்துரைகளை வழங்குதல் ஆகிய நான்கு நோக்கங்களுடன் இந்த அலுவலகம் இயங்கவுள்ளது.

இந்த நோக்கங்களை அடைவதற்கு, காணாமல் போனோரின் உறவினர்கள் பலத்தையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.