சவூதியில் சுட்டுக் கொல்லப்பட்ட பணிப்பெண் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆராய்வு

Report Print Ajith Ajith in சமூகம்

சவூதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் சடலம் மீதான மரண விசாரணைகள் தொடர்பாக ஆராய்வதற்காக சடலம் வைக்கப்பட்டுள்ள அல் ராஸ் வைத்தியசாலைக்கு சவூதியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சுட்டுக் கொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் பூதவுடலை நாட்டுக்கு கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை நாளைய தினம் மேற்கொள்ள உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பிரியங்கா ஜெயசங்கர் என்ற பணிப் பெண், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சவூதிக்கு பணிப் பெண்ணாக சென்றுள்ளார்.

சவூதி அரேபியாவின் புரைடா பகுதியில் உள்ள வீடொன்றில் பணியாற்றிய அவரை, அவரது தொழில் வழங்குநர் கடந்த சனிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

பின்னர், குறித்த துப்பாக்கியால் அவர் தம்மைத் தாமே சுட்டு தற்கொலை செய்துள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.