முல்லைத்தீவு ஒருங்கிணைப்பு கூட்டத்தில் படையினரின் கோரிக்கை நிராகரிப்பு

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கேம்பாவில் பகுதியில் ஏ - 35 வீதிக்கருகில் படையினர் கோருகின்ற 25 ஏக்கர் காணிகளையும் படையினருக்கு வழங்க முடியாதென ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கோம்பாவில் கிராம அலுவலர் பிரிவில் தற்போது படையினர் பயன்பாட்டிலுள்ள 25 ஏக்கர் காணிகளையும் தமக்கு வழங்குமாறு பிரதேச செயலாளர் ஊடாக கடந்த மாதம் 26ம்திகதி முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் படையினர் கோரியிருந்தனர்.

அப்போது வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் இணைத்தலைவர்கள் குறித்த காணியை உடனடியாக படையினருக்கு வழங்க முடியாது.

அது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் மக்களுடன் கலந்துரையாடி, அதற்கான முடிவுகளை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிப்பது தொடர்பில் இணைத்தலைவர்கள் சமூகம் அளிக்காததால் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கமுடியாது எனத்தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், படையினர் கோருகின்ற காணி பல்வேறுபட்ட பொதுத்தேவைக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதாலும் பொதுமக்களின் குடியிருப்புக்கு மத்தியில் இக்காணிகளை படையினருக்கு வழங்க முடியாதுள்ளது என்று வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் ஆ.புவனனேஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினர் வைத்திருக்கின்ற பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டுமென தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.