ஈழத் தமிழ் குடும்பத்தின் நாடுகடத்தலை தவிர்க்க தீவிர முயற்சி: 40,000 கையெழுத்து திரட்டல்

Report Print Ajith Ajith in சமூகம்

அவுஸ்திரேலியாவில் இருந்து ஈழத் தமிழ் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்படுவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த நாடு கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் கையெழுத்து திரட்டும் போராட்டத்தில் இதுவரையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைச்சாத்திட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நடேசலிங்கம் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோரும், அவர்களது இரண்டு பிள்ளைகளும், வீசா காலம் நிறைவடைந்த நிலையில், நாடுகடத்துவதற்காக மெல்போர்ன் குடிவரவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தமிழ் குடும்பம் 2012 ஆம் ஆண்டு முதல் குயின்ஸ்லாந்தில் வசித்து வரும் நிலையில் கடந்த ஓரு வாரத்திற்கு முன்னர் அதிகாலை வேளையில் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புத் துறையினர் 10 நிமிட அவகாசத்தில் அவர்களை தடுப்பு முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது ஏழு மாத குழந்தையும், இரண்டரை வயது குழந்தையும் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களிடம் சுயவிருப்பத்துடன் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கான ஆவணத்தில் பலவந்தப்படுத்தி கைச்சாத்துப் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தநிலையில் அவர்கள் வசித்து வந்த குயின்ஸ்லாந்தின் பிலோயிலா நகர மக்கள் உள்ளிட்டவர்களால், அவர்கள் நாடுகடத்தப்படுவதற்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.