மூங்கிலாறு வைத்தியசாலைக்கான வைத்தியர் விடுதி இவ்வாண்டில் அமைக்கப்படும்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - மூங்கிலாறு வைத்தியசாலைக்கான வைத்தியர் விடுதி இந்த ஆண்டில் அமைக்கப்படுமென முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாறுக் கிராமத்தில் உள்ள வைத்தியசாலை மீள்குடியேற்றத்தின் பின்னர் பொதுக்கட்டடம் ஒன்றிலும் அதனைத்தொடர்ந்து தனியார் வீடொன்றிலும் இயங்கிவந்துள்ளது.

இந்தப்பகுதி மக்களும் பொது அமைப்புக்களும் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடம் விடுத்த கோரிக்கையை அடுத்து கடந்த 2016ம் ஆண்டில் புதிய வைத்தியசாலைக்கான கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் வைத்தியசாலை இயங்கி வருகின்றது.

குறித்த வைத்தியசாலைக்கான வைத்தியர்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்தே சென்று வருகின்றனர்.

இந்நிலையில் வைத்தியசாலைக்கான வைத்தியர் விடுதியை அமைத்துத்தருமாறு இந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கருத்துத்தெரிவித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் இந்த வைத்தியசாலைக்கான வைத்தியர் விடுதி இவ்வாண்டில் அமைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.