தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவர்கள்: தொடரும் தேடுதல் நடவடிக்கை

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவர்களை தேடுவதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சம்பவத்தில் சிலாபத்தினை சேர்ந்த மூன்று மீனவர்களே காணாமல்போயிருந்த நிலையில், நாயாற்றுப் பகுதி மீனவர்களால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீனவர்கள் மூவரும் கடந்த 12ஆம் திகதி அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியிலிருந்து படகில் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.

சென்றவர்கள் 12ஆம் திகதி நண்பகல் வேளை கரை திரும்புவதாக தெரிவித்த போதும் அவர்கள் கரை திரும்பாத நிலையில் நேற்று காலை முதல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் கூறுகையில்,

சிலாபத்தினை சேர்ந்த 51 வயதான மில்ராஜ் மிரண்டா, 48 வயதான இமானுவேல் மிரண்டா, 24 வயதான மிதுறதன் மிரண்டா எனும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் சென்ற படகு சீரற்ற காலநிலை காரணமாக கடலில் மூழ்கி இருக்கலாம். இந்த நிலையில் எரிபொருள் நிரப்பும் கான் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

மேலும், காணாமல் போன மீனவர்களை தேடுவதற்கு கடற்படைக்கு தகவல் வழங்கியும் அவர்கள் அக்கறையில்லாது செயற்படுகின்றனர்.

கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டதால் நேற்றைய தினம் கடலுக்கு சென்று தேடமுடியாத நிலை காணப்பட்டது. எம்மால் முடிந்தளவு தேடியும் எந்த ஒரு தடயத்தையும் காணவில்லை.

இந்த விடயத்தில் கடற்படை மற்றும் அரசு அக்கறையீனமாக செயற்பட்டு வருவதுடன், குறித்த மீனவர்களை கடற்படையினரை கொண்டு தேட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மூலம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் மீனவர்களை தேட விமானப்படையின் உதவியை கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.