12 இலட்சத்திற்கும் அதிகமான பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

நல்லதண்ணி - சிவனொளிபாத மலைக்கு உட்பட்ட பகுதிகளில், இலட்சக்கணக்கான யாத்திரிகர்களால் பாவனைக்குப் பின்னர் வீசி எறியப்பட்ட நிலையில் கிடந்த சுமார் 12 இலட்சத்துக்குட்பட்ட பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களை இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்த பிளாஸ்டிக் போத்தல்கள் அம்பகமுவ பிரதேச சபையின் கழிவு சேகரிப்பு பிரிவினாலும், நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய பிரிவினாலும் சேகரிக்கப்பட்டதாக நல்லதண்ணி மீள்சுழற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ. ஹேமந்த தெரிவித்துள்ளார்.

நல்லதண்ணி நகரத்திலிருந்து சிவனொளிபாதமலை உச்சி வரை இந்த பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் மற்றும் மென்பான போத்தல்கள் என்பன சூழலில் வீசப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இனிவரும் காலங்களில் சிவனொளிபாதமலை பருவ காலத்தில் புனித பூமி சூழலுக்கு உக்கலடையாத போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை வீசுவதிலிருந்து தவிர்த்து சூழலுக்கு இணக்கமான பருவகால வழிபாடுகளில் ஈடுபடுமாறு அனைத்து யாத்திரிகர்களிடமும் கேட்டுகொள்வதாக நல்லதண்ணி கழிவு சேகரிப்பு மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ. ஹேமந்த மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.