தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது

Report Print Kumar in சமூகம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான சுதந்திரன் பத்திரிகை, “புதிய சுதந்திரன்” என்னும் தலைப்புடன் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்டிருந்த சுதந்திரன் பத்திரிகை 35 வருடங்களுக்கு பின்னர் “புதிய சுதந்திரன்” என்னும் தலைப்புடன் வெளிவந்துள்ளது.

இதன் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பத்திரிகை அறிமுகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் நடாத்தினார்.

பத்திரிகையினை இலங்கை தமிழரசுக்கட்சியின் உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராஜா முதல் பத்திரிகையினை வழங்கி ஆரம்பித்துவைத்தார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராஜா, கலையரசன், இராஜேஸ்வரன், பிரசன்னா இந்திரகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பத்திரிகையான “புதிய சுதந்திரன்” திருகோணமலை மாவட்ட காரியாலயத்தில் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

கிழக்குமாகாண முன்னாள் அமைச்சர் எஸ்.தண்டாயுதபானி தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பத்திரிகையாக ஆரம்ப காலத்தில் சுதந்திரன் எனும் பெயரில் வெளியான இப்பத்திரிகை மீண்டும் “புதிய சுதந்திரன்” எனும் பெயரில் வெளியிடப்பட்டது.

இதில் கனடா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் குகதாஷன் மற்றும் உயர் பீட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.