ஆலய உண்டியல்களில் நிரம்பும் பணத்தை உடனுக்குடன் வங்கிகளில் வைப்பிலிடுமாறு அறிவிப்பு

Report Print Rusath in சமூகம்

ஆலய உண்டியல்களில் சேரும் காணிக்கைப் பணத்தை உண்டியல்களிலேயே உடனுக்குடன் வங்கிகளில் வைப்பிலிடுமாறு ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆலயங்களின் நிர்வாகத்தினருக்கு அவர் இன்று விடுத்துள்ள அறிவிப்பிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கோயில்களில் இருக்கும் உண்டியல்களைக் குறிவைத்து சில கொள்ளையர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இது குறித்து பொலிஸாரோடு சேர்ந்து பொது மக்களும், ஆலய நிர்வாகத்தினரும் அவதானம் செலுத்த வேண்டும்.

இந்த வாரத்தின் துவக்கத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களும் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருவேறு இடங்களில் இருவேறு ஆலய உண்டியல்கள் பணத்தோடு திருடப்பட்டுள்ளன.

எனினும், பொலிஸாரின் துரித புலனாய்வு நடவடிக்கைகளால் திருட்டுப் போன உண்டியல்களும், அவற்றிலிருந்த பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இந்த விடயத்தில் பொதுமக்களும் கோயில் நிர்வாகங்களும் விழிப்பாக இருக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

ஆலய உண்டியல் பணத்தை மாத்திரமல்ல பொது மக்களும் தம்மிடம் தேவைக்குப் போக மீதமுள்ள பணத்தையும், நகைகளையும் பாதுகாப்பற்ற முறையில் வீடுகளிலோ, வர்த்தக நிலையங்களிலோ வைத்திருப்பதை விட அவற்றைத் தாங்கள் விரும்பும் வங்கிகளில் பாதுகாப்பாக சேமித்து வைப்பதே அறிவுடைமையாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.